அரசியல் கைதிகளை சனிக்கிழமைக்குள் விடுவிக்க வேண்டும்! – கூட்டமைப்பு எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் சனிக்கிழமைக்கு முன்பாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 எம்.பிக்களும் கையொப்பமிட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். இன்று அனுப்பி வைக்கப்பட்ட அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் முழுமையாக வருமாறு:

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, பல தடவைகள் தங்களின் கவனத்துக்கு நாங்கள் கொண்டு வந்துள்ளோம். ஆனால் இன்றுவரை அவர்களின் விடுதலை தொடர்பாக தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டு நிரந்தரமான தீர்வு எட்டப்படவில்லை. கைதிகளின் விடுதலை தொடர்பில் பலரும் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வந்தாலும் கூட, தங்களின் உண்மையான நிலைப்பாட்டை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே எமது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

கைதிகள் தமது உடனடி விடுதலையை வலியுறுத்தி 12.10.2015 அன்று ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாநிலை போராட்டம் 17.10.2015 வரை தொடர்ந்தபோது தாங்கள், அரசியல் கைதிகளும் அவர்களது குடும்பங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை நவம்பர் 7க்கு முன்பாக பெற்றுக் கொடுப்பதாக கூறிய வாக்குறுதியை நம்பி, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்கள் தங்களின் வாக்குறுதியை கைதிகளுக்கு தெளிவுபடுத்தியதன் காரணமாக தற்காலிகமாக உண்ணாநிலை போராட்டத்தை அரசியல் கைதிகள் முடிவுக்கு கொண்டு வந்திருந்தனர். ஆனால் இன்று வரை கைதிகளின் விடயத்தில் எவ்விதமான முன்னேற்றமும் காணப்படவில்லை.

பல ஆண்டுகளாக பல்வேறு துன்பங்களோடு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள், இவ்வாண்டு ஜனவரி 8 அன்று ஒன்றுசேர்ந்து ஜனநாயக ரீதியாக ஒரு புரட்சியை ஏற்படுத்தி தங்களின் தலைமையில் ஒரு நல்லாட்சி புதிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த நல்லாட்சியில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் ஒன்றாகிய அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு இன்றுவரை முடிவு காணாமலிருப்பது எமக்கு மிகுந்த அவநம்பிக்கையையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்துகின்றது.

8 முதல் 20 வருடங்களாக நீதிக்கு புறம்பாக சிறைச்சாலைகளில் வதைபடும் எமது உறவுகளான அரசியல் கைதிகளின் பிரச்சினையை மனிதாபிமான ரீதியில் அணுகி, விரைவாக ஒரு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

Views:
261
Article Categories:
News · Sri Lanka

Comments are closed.