மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் நள்ளிரவு 1.15 மணி அளவில் தன்னை சந்தித்து விட்டு செல்லும் வீடியோ காட்சிகளை பிரியங்கா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சோனபத்ரா செல்ல அனுமதி மறுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தமது கட்சியினருடன் விடுதியில் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ‘பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்காமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்’ என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தின் சோன்பத்ரா கிராமத்தில் நிலப் பிரச்னையால் குஜ்ஜார் மற்றும் கோண்ட் சமூக மக்களிடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் காயமடைந்தனர். 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 74 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னர் கருத்து தெரிவித்த உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி, மாநிலத்தில் ஆளும் பாஜக-வையும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் கடுமையாக விமர்சித்தார். உத்தர பிரதேசத்தில் சட்ட ஒழுங்கு தொடர்ந்து சீர் கெட்டு வருவதை இந்த சம்பவம் பிரதிபலிப்பதாகவும் பிரியங்கா கூறியிருந்தார்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்திக்க பிரியங்கா காந்தி, நேற்று நேரில் சென்றார். முதலில் வாரணாசி சென்றிறங்கிய அவர், சோன்பத்ரா துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறவர்களை பார்த்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
அதைத் தொடர்ந்து சோன்பத்ராவுக்கு அவர் புறப்பட்டார். ஆனால், அவரை பாதியிலேயே உத்தர பிரதேச போலீஸ் தடுத்து நிறுத்தியது. சோன்பத்ராவுக்குப் போகும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டதால், சாலையில் இறங்கி அமர்ந்துவிட்டார் பிரியங்கா காந்தி. அவரை காங்கிரஸ் தொண்டர்களும் பாதுகாப்புப் படையினரும் சூழ்ந்து கொண்டனர்.