இலங்கைக்கு அருகில் வெள்ளியன்று விழும் மர்மப் பொருள் தொடர்பில் எச்சரிக்கை

Space Stone Drop Near Sri lanka

தென்பகுதி கடலில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விழலாமென எதிர்பார்க்கப்படும் மர்மப் பொருள் இடைவழியில் வெடித்து சிதறினால், நிலப் பகுதியில் விழும் அதன் பாகங்களை எவரும் தொட வேண்டாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் பீட பேராசிரியரும் வான சாஸ்திர விஞ்ஞானியுமான சந்தன ஜயரட்ன தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்:

இலங்கையின் தென்பகுதியிலுள்ள தேவேந்திரமுனையிலிருந்து 65 கிலோ மீற்றர் தூரத்தில் கடலில் WT1190F எனப் பெயரிடப்பட்ட மர்மப் பொருளொன்று நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முற்பகல் 11.50 மணிக்கு விழவிருக்கின்றது.

சந்திரன் தற்பொது இருக்கும் இடத்திலிருந்து இரு மடங்குகளுக்கு அப்பாலான தூரத்திலிருந்தே இப்பொருள் பூமியை நோக்கி வருகின்றது.

இந்தப் பொருள் இரண்டு மீற்றர்கள் நீளமானதாக (07 அடிகள்) காணப்படுகின்றது. குழாய் வடிவில் துள கொண்டதாகக் காணப்படும் இப்பொருள் ஏற்கனவே சந்திரனுக்கு ஏவப்பட்ட ரொக்கட்டின் பாகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இப்பொருள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியே வந்து கொண்டிருக்கின்றது. என்றாலும் இன்னும் வளி மண்டலப் பகுதிக்குள் உட்பிரவேசிக்கவில்லை.

அவ்வாறு பிரவேசிக்கும் போது வெப்ப நிலை அதிகரித்து ஒரு பகுதி தீப்பற்றி எரிந்து விட முடியும்.

அப்பொருள் ரொக்கட்டின் என்ஜின் பாகம் என்றால் வளிமண்டலத்தில் சுமார் நூறு கிலோ மீற்றர்கள் செல்லும் போது வெப்ப நிலை அதிகரித்து வெடித்து சிதற முடியும். அவ்வாறு வெடித்துச் சிதறும் போது அதன் பாகங்கள் நிலப் பகுதியிலும் விழலாம்.

இதன் பாகங்கள் நிலப்பகுதியில் விழுந்தால் அவற்றை எவரும் தம் கைகளால் பிடிக்க வேண்டாம்.

ஏனெனில் அப்பாகங்களில் கதிர் தாக்கங்கள் காணப்படலாம். அதனால் அப்பாகங்கள் விழுந்திருக்கும் இடம் தொடர்பான தகவலை உடனடியாக எமக்கு அறியத் தாருங்கள்.

அவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவென நாம் குழுவொன்றை அமைத்துள்ளோம். இப்பொருள் வளிமண்டலத்தினுள் பிரவேசித்த பின் தீப்பந்து போன்று கூட காட்சியளிக்கலாம்.

இப்பாகம் விழுவது குறித்து எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் இவ்வாறான பொருட்கள் உலகின் பல பிரதேசங்களில் ஏற்கனவே விழுந்துள்ளன.

அதே நேரம் இப்பொருள் கடலில் விழுவதால் சுனாமி பேரலை ஏற்படும் என்றும் அஞ்சத் தேவையில்லை.

என்றாலும், இப்பொருள் முற்பகல் 11.50 மணிக்கு விழவிருப்பதால் அதற்கு முன்னரான ஒரு மணித்தியாலம் முதல் பின்னரான ஒரு மணித்தியாலம் வரையும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென கேட்டுக் கொள்ளுகின்றோம்.

அதே நேரம் இப்பொருள் எமக்கு அருகிலுள்ள சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதை பகுதியிலேயே விழவிருக்கின்றது.

அதனால் இக்காலப்பகுதியில் இப்பகுதியின் ஊடாக கப்பல் போக்குவரத்தை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவூட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

அத்தோடு விமானங்களையும், ஹெலிக்கொப்டர்களையும் இக்காலப் பகுதியில் இப்பகுதியில் பயணிக்க வேண்டாம் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Views:
211
Article Categories:
News · Sri Lanka

Comments are closed.