உள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது! – ஜப்பானிய தூதுவரிடம் முதலமைச்சர்

Jaffna CM

போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நன்மை தராது என்று ஜப்பான் தூதுவரிடம் தாம் தெரிவித்ததாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிச்சி சுகனுமா வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது வடக்கு முதல்வரிடம் ஜப்பான் தூதுவர் உள்ளக விசாரணை மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற கருத்தை முன்வைத்தார். அந்தக் கருத்தை மறுத்து முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் ஜப்பான் தூதுவரின் யாழ்.விஜயம் தொடர்பில் வடக்கு முதல்வர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ஜப்பான் தூதுவர் யாழ்.வந்ததன் பிரதான நோக்கம் ஜெய்க்கா செயற்திட்டத்தை பற்றி அறிந்து செல்லவே ஆகும். வடமாகாணத்திலே வெளிநாட்டு நிறுவனங்களும்,வெளிநாட்டு அரசும் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுக்கும் தரவுகள் முழுமையாக எமக்கு தரப்படுவதில்லை. நேரடியாக மத்திய மாகாணத்திடம் செல்கின்றது. எப்பேர்ப்பட்ட செயற்திட்டங்களை நீங்கள் முன்னெடுத்தாலும் குறித்த நாட்டின் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து செயற்திட்டத்தை தீட்டினால் அது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்ற கருத்தை ஜப்பான் தூதுவரிடம் முன்வைத்தேன்.

நல்லெண்ணத்தை வெளியில் இருந்து கொண்டு வந்து எங்களிடம் திணிக்க முடியாது. அதனை எடுத்துக் காட்டக்கூடியவாறு செயற்படுத்த வேண்டும். உதாரணமாக சிறையில் வாடும் 300, 400 பேரை விடுவிப்பதற்கு அரசு எவ்வளவு கஸ்டப்படுகிறது. சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் தடங்கல், தாமதம் எதற்கு? வியப்பாக இருக்கிறது. இவ்வாறான சிறிய விடயங்களில் விட்டுக்கொடுத்தால் தான் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அதைவிடுத்து நல்லிணக்கம் என்று பேசுவதில் எதுவித அர்த்தமும் இல்லை என்று அவரிடம் குறிப்பிட்டேன்.

மேலும் ஜப்பான் தூதுவர், நாட்டிலே தமிழ் நீதிபதிகள் இல்லையா என்று கேள்வி ஒன்றினை என்னிடம் எழுப்பினார். அதற்கு தமிழ் நீதிபதிகள் நாட்டில் குறைவு தான் ஆனால் அவர்கள் சரியானதொரு தீர்மானத்திற்கு வருவார்கள் என்று கூறமுடியாது. ஏனென்றால் சில வேளைகளில் அவர்களையும் பயம் பீடிக்கிறது. ஏதாவது ஒன்றைக்கூறி பின்விளைவுகளில் மாட்டிவிடுவோம் என்ற கருத்துக்கூட சிறுபான்மை நீதிபதிகளிடம் இருக்கின்றது. ஆகவே பக்கர்சார்பில்லாத நீதிபதிகள் வெளியில் இருந்து கொண்டு வந்தால் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கலாம். அவ்வாறு நீதியைப் பெற்றுககொடுக்காதவிடத்து மக்களின் ஆத்திரம் சுமூகமான சூழலை ஏற்படுத்தாது என்று அவரிடம் குறிப்பிட்டேன் என்றார்.

Views:
291
Article Categories:
News · Sri Lanka

Comments are closed.