கருணாவை எவ்வாறு கொழும்புக்கு கூட்டிச் சென்றேன்? – விளக்குகிறார் அலிசாஹிர் மௌலானா எம்.பி.

Ali Zaher Moulana

அன்று ஏப்ரல் 12ம் திகதி. மாலை 5 மணியளவில் தொப்பிகலவிற்குச் செல்லும் பிரதான வீதியிலிருந்து குறுக்கு வீதியூடாக எனது வாகனம் பயணித்துக் கொண்டிருந்தது.

சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரம் வரை சென்ற போது அங்கு கருணா அம்மானும் அவரது குழுவினரும் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தனர். என்னுடைய வாகனத்தில் கருணா அம்மானையும் இன்னும் நான்கு பெண் தளபதிகளையும் ஏற்றிக்கொண்டேன். மற்றுமொரு வானில் முக்கிய தளபதிகள் சிலர் ஏறிக்கொண்டனர்.

விடுதலைப் புலிகள் இயக்கம் கருணா அம்மானை உயிருடனோ அல்லது பிணமாகவோ கைப்பற்றுவதற்கு எத்தனை கோடி ரூபா பணத்தை வேண்டுமானாலும் செலவுசெய்ய பின்வாங்காது என்ற ஊகம் என்னிடமிருந்தது.

ஆகையினால் இந்த விடயத்தில் யாரையும் நம்பாது நானே முன்னெடுக்கத் தயாரானேன். கருணா அம்மானை கொழும்புக்கு கூட்டிச் செல்லும் சங்கதியை எனது மனைவியிடம் கூட தெரிவிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றின் வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அந்த செவ்வியின் விபரம் வருமாறு,

கேள்வி: கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த பின்னர் அவரை நீங்கள்தான் கொழும்புக்கு அழைத்து வந்தீர்கள். அவரை கொழும்புக்கு அழைத்து வருமாறு அரசியல் தலைவர்கள் யாரும் உங்களை வேண்டிக்கொண்டார்களா?

பதில்: இல்லை. அவ்வாறு யாரும் வேண்டிக்கொள்ளவில்லை. 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் திகதி அழைப்பை ஏற்படுத்திய கருணா அம்மான், தான் கொழும்புக்குப் போக வேண்டும் எனவும் அதற்காக நம்பகமான சாரதியொருவரையும், வாகன வசதியையும் ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டார். எனினும் தற்போதைய சூழலில் எவரையும் நம்பி ஏற்பாடு செய்ய முடியாதுள்ளது. ஆகையினால் நானே தங்களை கொழும்புக்கு கூட்டிச் செல்வதாக கருணாவிடம் தெரிவித்தேன்

ஏனெனில் விடுதலைப் புலிகள், கருணா அம்மானை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிப்பதற்கு எத்தனை கோடி ரூபா பணத்தை வேண்டுமானாலும் செலவு செய்வார்கள் என்று நான் உணர்ந்தேன். அதனால் நானே கருணாவை கூட்டிச் செல்வதற்கு ஆயத்தமானேன். மேலும், அவரை கொழும்புக்கு கூட்டிவரும் விடயத்தை சமாதானப் பேரவையின் பணிப்பாளர் நாயகம் பேர்னாட் குணதிலக்கவிடம் மாத்திரம் தெரிவித்தேன்.

கருணா அம்மான் இயக்கத்திலிருந்து பிரிந்த பின்னர் புலிகளுடன் மோதல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் மோதல் தவிர்ப்பை மேற்கொள்வாராயின் சமாதானப் பேரவை அவரை பாதுகாப்பதற்குத் தயார் என்கின்ற உத்தரவாதத்தையும் பேரவையிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.

கேள்வி: நீங்கள் கருணா அம்மானை எங்கு, எப்போது தங்களின் பொறுப்பில் எடுத்தீர்கள்?

பதில்: அவரை கொழும்புக்கு கூட்டி வருவதென்பது மிகவும் சவால் நிறைந்த விடயம். அதனால் அந்த விடயத்தில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கினேன். அதாவது கருணா அங்கிருந்தால் மோதல் ஏற்படும். ஆகவே, வடக்குப் புலிகளும் கிழக்குப் புலிகளும் மோதி அங்கு உயிர்ச்சேதம் இடம்பெறுவதைத் நான் விரும்பவில்லை. அதனாலேயே அந்த சிரமமான காரியத்தை சவாலாக ஏற்று முன்னெடுக்கத் தயாரானேன்.

அன்று ஏப்ரல் 12ம் திகதி. நான் கருணா அம்மானை கொழும்புக்கு கூட்டிச் செல்லத் தயாராகும் விடயத்தை எனது மனைவியிடம்கூட தெரிவிக்கவில்லை. காலை எட்டு மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பு சென்றேன். மாலை 5 மணியளவில் தொப்பிகலவிற்குச் செல்லும் பிரதான வீதியிலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் வரையிலான குறுக்கு வீதியில் பயணித்து அங்கிருந்த கருணாவையும் அவரது குழுவினரையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டேன்.

என்னுடைய வாகனத்தில் கருணா அம்மானையும் இன்னும் நான்கு பெண் தளபதிகளையும் ஏற்றிக்கொண்டேன். மேலும் இன்னுமொரு வானில் முக்கிய தளபதிகள் சிலர் பயணத்தை ஆரம்பித்தனர். அவர்கள் ஆயுதம் ஏந்தி போராடியவர்களல்ல. கருணா அம்மானுக்கு ஆலோசகர்களாகச் செயற்பட்டவர்கள். மறுநாள் அதிகாலை 2 மணியளவில் கொழும்பு வந்து தனியார் ஹோட்டல் ஒன்றில் அவர்களை தங்கவைத்தேன்.

தங்கவைத்த பின்னர் சமாதானப் பேரவையின் பணிப்பாளர் நாயகம் பேர்னாட் குணதிலக்கவிற்கு அழைப்பை ஏற்படுத்தி, கருணா அம்மான் கொழும்பு வந்த விடயத்தையும் தங்கியிருக்கும் ஹோட்டலையும், அறை இலக்கத்தையும் தெரிவித்தேன். பிறகு ஒரு மணி நேரத்தின் பின்னர் கருணா அம்மான் எனக்கு தொடர்பை ஏற்படுத்தி தான் நலமாக இருப்பதாகத் தெரிவித்தார். அத்துடன் என்னை பாதுகாப்பாக இருக்குமாறு அன்பான வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார்.

அக்காலப்பகுதியில் பேர்னாட் குணதிலக்க சமாதானப் பேரவையின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியதோடு வெளிநாட்டமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றினார். எனவே, பேர்னாட் குணதிலக்க வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் அனுமதியுடனேயே இதனை மேற்கொண்டுள்ளார். அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அனுமதியோடே குறித்த விடயத்தை மேற்கொண்டார்.

கேள்வி: கருணா அம்மான் இயக்கத்திலிருந்து பிரிய முனைந்த சந்தர்ப்பத்தில் உங்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். அது தொடர்பில்…

பதில்: அது ஒரு இக்கட்டான சூழ்நிலை. ஏனெனில் அப்போது அரசாங்கம் மாறியிருந்தது. நாம் எதிர்க்கட்சியில் இருந்தோம். 2004ம் ஆண்டு ஏப்ரல் 10ம் திகதி பெரிய வெள்ளிக்கிழமை. அன்று கடற்புலிகள் முல்லைத்தீவிலிருந்து வாகரை வெருகல் ஆறுவரை GUN BOAT இல் முன்னேறி வந்து கரையோரத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஒப்பந்த காலத்தில் ஆயுதங்களுடன் நடமாட முடியாது. எனவே, GUN BOAT இல் பயணம் செய்தமையானது ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். அது இலங்கை கடற்படைக்குச் சொந்தமான பிரதேசமாகும்.

அப்போது கருணா அம்மான் என்னை தொடர்பு கொண்டு குறித்த விடயத்தை தெரிவித்தார். மேலும் தாக்குதலில் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற அம்பியூலன்ஸ் வண்டி சாரதி மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நான் குறித்த மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவர்களுடன் மோதலில் ஈடுபடாமல் மோதல் தவிர்ப்பு செய்யுமாறு கருணாவிடம் வேண்டினேன். அதனை கருணா ஏற்றுக்கொண்ட போதிலும் ‘ஒரு நாளும் நான் மோதல் நடவடிக்கைகளுக்குப் பின்வாங்கியதில்லை. ஆனாலும், சகோதரப் படுகொலைகளைத் தவிர்ப்பதற்காக நான் மோதல் தவிர்ப்பு செய்கிறேன். எனினும் கடற்படை, புலிகளை உள்நுழைய விட்டதைப் போன்று இலங்கை இராணுவமும் புலிகளை உள்நுழையவிட்டால் அவர்களுடன் மோதியாக வேண்டிய நிலை ஏற்படும். என்னிடமும் பலம் வாய்ந்த ஆயுதங்கள் இருக்கின்றன. ஆகவே, அவர்கள் அவ்வாறு உள்நுழைவார்களானால் அடித்து துரத்துவேன் எனக் குறிப்பிட்டார்.

மேலும், தனது தலைமையின் கீழ் இளையவர்கள் இரண்டாயிரம் பேர் வரையில் உள்ளனர். அவர்களை அவர்களின் பெற்றோர்களிடம் அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்தார். அதனை ‘யுனிசெப்’ நிறுவனத்தினூடாக மேற்கொள்ளுமாறு கருணாவுக்கு ஆலோசனை வழங்கினேன். இளையவர்களை பெற்றோர்களிடம் அனுப்பிவைத்த விடயம் சர்வதேச ரீதியில் வரவேற்பைப் பெற்றது.

கேள்வி: ஒஸ்லோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, குறித்த பேச்சுவார்த்தையினை தொடர்ந்தும் முன்னெடுப்பது சம்பந்தமாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் அனுமதி பெறாமல் கருணா அம்மான் கைச்சாத்திட ஊக்கப்படுத்தியமையினால் ஏற்பட்ட முரண்பாடா கருணாவின் பிரிவுக்கு காரணமாக அமைந்தது?

பதில்: அதுவும் ஒரு காரணம்.

கேள்வி: அவ்வாறெனில் வேறு காரணங்கள் ஏதும் உண்டா?

பதில்: அவரின் பிரிவுக்கு பலவிதமான காரணங்கள் உள்ளதாகக் கேள்விப்பட்டேன். மேலும், இன்னுமொரு காரணத்தை கருணா அம்மான் என்னிடம் தெரிவித்தார். ஒஸ்லோவினூடாக புலிகளின் மாவீரர் குடும்பங்களின் புனரமைப்புக்காக ஐரோப்பிய யூனியன் மற்றும் நோர்வே மூலமாக நிதி வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாவீரர் குடும்பங்கள் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்றன. அவர்களுக்கும் உதவி செய்யுமாறு கேட்டபோதும் அவர்களுக்கான உதவி கிடைக்கவில்லை. என கருணா என்னிடம் தெரிவித்தார்.

கேள்வி: உங்களுக்கும் முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மானுக்குமிடையிலான தொடர்பு எப்போது ஆரம்பமானது?

பதில்: வயதைப் பொறுத்தவரையில் அவர் என்னைவிட பத்து வயது இளமையானவர். 1990ம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில்தான் நான் அவரை முதன் முதலில் சந்தித்தேன்.

கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். மட்டக்களப்பிலுள்ள விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற குறித்த பேச்சுவார்த்தையில் கருணா அம்மான், கரிகாலன், விசு ஆகியோர் விடுதலைப் புலிகளின் சார்பில் கலந்து கொண்டிருந்தனர். அதன்போது நாம் முன்வைத்த பிரச்சினைகளை ஆராய்ந்த புலிகள் தரப்பினர், எதிர்காலத்தில் அவ்வாறு எதுவும் இடம்பெறாது தாங்கள் கவனித்துக் கொள்வதாகக் வாக்குறுதியளித்தனர்.

கேள்வி: எனினும் விடுதலைப் புலிகளின் தரைப்படைத் தளபதியாக கருணா அம்மான் பதவி வகித்த போதுதானே கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கெதிரான அசம்பாவிதங்கள் நடைபெற்றன.

பதில்: ஆம். 1990ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பின்னர் மீண்டும் யுத்த நடவடிக்கைகள் ஆரம்பமாயின. எனவே, யுத்தம் ஆரம்பமான பின்னரே முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளும் ஆரம்பமாகின. அக்காலப்பகுதியில் எவ்விதமான பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை.

1990ம் ஆண்டுகளின் பின்னர் கருணாவுடன் நான் எவ்விதமான தொடர்புகளையும் வைத்துக் கொள்ளவில்லை. அதன் பின்னர் 2002ம் ஆண்டு நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போதுதான் கருணா அம்மானை சந்தித்தேன். அக்காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பினர் முற்றுமுழுதாக ஆயுதங்களை களைந்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்தார்கள்.

எனவே அக்காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்காக அரசாங்க தரப்பில் நானும் புலிகள் தரப்பில் கருணா அம்மானும் பேச்சுவார்தைகளையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம்.

கேள்வி : தங்களின் மனைவியும் கருணா அம்மானின் மனைவியும் நண்பர்களெனவும் அதனால்தான் தங்கள் இருவருக்குமிடையில் தொடர்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டதே…

பதில் : அவ்வாறு ஏதும் இல்லை. அது வெறும் வதந்தி. எனது மனைவிக்கும் கருணா அம்மானின் மனைவிக்கு மிடையில் எதுவித சம்பந்தமும் இல்லை. அது மாத்திரமல்ல எனது மனைவியும் கருணா அம்மானின் மனைவியும் சகோதரிகளெனவும் அதனால் எமது சொந்த உறவுகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது. அவை அனைத்தும் உண்மைக்குப் புறம்பான விடயங்கள். அவர்களுக்கிடையில் எந்த உறவுமுறையும் இல்லை.

நானும் கருணா அம்மானும் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளின் போதே தொடர்பு கொண்டிருந்தோம். கருணாவுடன் அரசியல் ரீதியான தொடர்புகளைத் தவிர வேறு தொடர்புகள் ஏதும் இல்லையெனினும் ஒரு சந்தர்ப்பத்தில் அவரது குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதாவது பேச்சுவார்த்தை நடைபெற்ற காலகட்டத்தில் கருணா அம்மான் தனது பிள்ளைகள் ஆங்கிலக் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். அப்போது எனது மனைவி கொழும்பில் பிரபலமான சர்வதேசக் கல்லூரி ஒன்றை நடத்திக்கொண்டிருந்தார். தமிழ் அரசியல்வாதிகளின் பிள்ளைகள்கூட அந்தக் கல்லூரியில்தான் கல்வி கற்றுக்கொண்டிருந்தார்கள்.

ஆகவே, மட்டக்களப்பில் ஒரு சர்வதேசப் பாடசாலையை ஆரம்பிக்குமாறு என்னிடம் வேண்டினார். அவரின் வேண்டுகோளுக்காக மட்டக்களப்பில் சர்வதேச பாடசாலை ஒன்றை ஆரம்பித்தேன். தற்போதும் அப்பாடசாலை இயங்கிக்கொண்டிருக்கிறது. அது மாத்திரமன்றி கருணாவின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் இரு பிள்ளைகளும் கொழும்பு வந்து அவர்களது ஆரம்பக் கல்வியை எனது கல்லூரியிலேயே கற்றனர்.

மேலும், அவரது முதலாவது குழந்தை பிறந்த போது தான் யாழ்ப்பாணத்தில் இருந்ததாகவும், பிறந்து ஆறுமாத காலத்தின் பின்னரே குழந்தையைப் பார்த்ததாகவும் இரண்டாவது பிள்ளை பிறந்து ஒரு வருடத்தின் பின்னரே பார்த்ததாகவும் கருணா குறிப்பிட்டார். மேலும், தனது மூன்றாவது பிள்ளை பேச்சுவார்த்தை காலத்தில் பிறந்ததால் அப்போது மாத்திரம் மனைவியின் பிரசவத்தின் போது அருகில் இருந்ததாகவும், அதனால் Peace baby என்று மூன்றாவது பிள்ளையை அழைப்பதாகவும் அவரது ஆதங்கத்தைத் என்னிடம் தெரிவித்துள்ளார்.

கேள்வி: கருணா அம்மானை விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிப்பதில் தாங்கள் முக்கிய பங்கு வகித்ததாக குறிப்பிடப்படுகிறதே…

பதில்: ஒருபோதும் இல்லை. நான் கருணா அம்மானை பிரிக்கவில்லை என்பது புலிகள் இயக்கத்திற்கும் நன்கு தெரியும். அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினாலேயே கருணா பிரிந்தார். மேலும் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது, அரசாங்கத்தோடு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பேச்சுவார்த்தை தொடர வேண்டுமாயின் உங்களுக்குள் சுமுகமான நிலை ஏற்பட வேண்டும். எனவே கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்த்து ஒருமுகப்படுமாறு நான் கருணாவிடம் வேண்டிக்கொண்டேன்.

மேலும், கருணா பிரிந்தவுடன் அவரின் உதவித் தளபதியாக செயற்பட்ட ரமேஷ் வடக்கிற்குச் சென்றுவிட்டார். அவர் அங்கு செல்வதற்கான காரணம் அவரின் மனைவி, கடற்புலிகளின் தலைவரின் சகோதரியாவார். ஆகையினால் ரமேஷ் வடக்கிற்குச் சென்றுவிட்டார். ரமேஷ் அங்கு சென்றதும் அவர் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக அமர்த்தப்பட்டார்.

2004ம் ஆண்டு மார்ச் மாதம் 05ம் திகதி ரமேஷ் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ‘தன்னை கிழக்குத் தளபதியாக அமர்த்தியிருக்கின்ற போதிலும் கருணா அம்மான் எனது குரு. எனவே அவரின் உதவியாளராக நான் செயற்பட்ட போது அரசாங்க பேச்சுவார்த்தைகளுடன் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு ‘அண்ணன் மௌலானாவுடன்’ பேசுமாறே கருணா பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்.

எனவே, இப்போது அவர் எங்களை விட்டு பிரிந்ததால் அவருக்குப் பதிலாக என்னை தளபதியாக நியமித்துள்ளார்கள். எனினும் நான் அவருடன் மோதுவதற்குத் தயாரில்லை. இதுதொடர்பில் நான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். தற்போது தமிழ்ச்செல்வன் என்னுடன் இருக்கிறார். அவர் தலைவருடனான பேச்சுவார்த்தை தொடர்பில் விரிவாக உங்களுடன் பேசுவார்.

மேலும், மோதலைத் தடுத்து, கருணா அம்மானுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு இயக்கம் முன்வந்துள்ளது. ஆகவே அவர் தனது குடும்பத்துடன் தாம் விரும்பிய நாடுகளுக்குச் சென்று வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்குமாறும்’ ரமேஷ் என்னிடம் வேண்டிக்கொண்டார்.

ரமேஷின் வேண்டுகோளை கருணா அம்மானிடம் தெரிவித்தேன். ஆனால் கருணா, தான் இறந்தாலும் பரவாயில்லை. இந்த மண்ணை விட்டுப்போக மாட்டேன். அவர்களின் பொது மன்னிப்பு எனக்குத் தேவையில்லை. ஆகையினால் அவர்களிடம் மண்டியிட வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார்.

கேள்வி: கருணா அம்மானை தாங்கள் பிரிக்கவில்லை என்று குறிப்பிடுகிறீர்கள். எனினும் புலிகள் இயக்கத்திலிருந்து தங்களுக்கு அச்சுறுத்தல் இருந்ததுதானே…

பதில்: அச்சுறுத்தல் என்பதைவிட, கருணா அம்மான் கொழும்புக்கு வந்த பின்னர் அவர் எங்கிருக்கிறார் என்பதை புலிகள் இயக்கம் தேட ஆரம்பித்துவிட்டது. அப்போது இயக்கத்திலுள்ளவர்கள் என்னை தொடர்பு கொண்டு ‘கருணா அம்மான் எங்கிருக்கிறார்’ என தொல்லை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்தக் கால கட்டத்தில் எங்களின் அரசாங்கமும் ஆட்சியில் இல்லை. நாம் எதிர்க்கட்சியில்தான் இருந்தோம். 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்து விட்டது.

புலிகளிடமிருந்து எனக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்பு வந்ததனால் எனது அந்த தொலைபேசி இலக்கத்தைக்கூட செயலிழக்கச் செய்தேன். அதன் பின்னர் எனது மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தி தொல்லைப்படுத்தினர்.

கேள்வி: புலிகள் இயக்கத்திலிருந்து அச்சுறுத்தல் இல்லை எனக் குறிப்பிட்டீர்கள். அவ்வாறெனின் தாங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து வெளிநாடு சென்றமைக்கான காரணம் ஏன்ன?

பதில்: ஏற்கனவே குறிப்பிட்டது போன்ற தொல்லைகள் இருந்தமையினால் அது தர்மசங்கடமான நிலையைத் தோற்றுவித்தது. நான் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். எனினும் அங்கு சென்று எனது பணியினைத் தொடர முடியாத சூழ்நிலை. அங்கு செல்கின்ற போது என்னை ஒரு பணயக் கைதியாக பிடித்து வைத்துக்கொண்டு கருணா அம்மானை அழைக்கலாம் என்கின்ற ஊகங்களும் என்னிடமிருந்தன.

பாதுகாப்பு பிரிவினரும் எனது பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான பாதுகாப்பு கெடுபிடிகளும் ஏற்படுத்தப்பட்டன. அத்துடன் கருணா அம்மானும் அப்போதைய அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு எனது பாதுகாப்பை அதிகரிக்குமாறு அரசாங்கத்தை வேண்டியுள்ளார்.

ஆகவே எனது வீடே ஒரு பொலிஸ் நிலையமாக செயற்பட்டுக்கொண்டிருந்தது. அது ஒரு சங்கடமான கால கட்டம். ஆகையினால்தான் சிறிது காலம் இந்த நாட்டைவிட்டு வெளிநாடுகளில் இருக்கலாம் என எண்ணி அமெரிக்கா சென்றேன்.என்றார்.

Views:
247
Article Categories:
News · Sri Lanka

Comments are closed.