“துன்பத்தை பரிசாக தரவேண்டாம்” விஜய் தொலைக்காட்சிக்கு வேண்டுகோள்!

Vijay TV Logo

இந்த பூமிப்பந்தின் மூத்த மொழியான எங்களின் தமிழ் மொழியை பேசிய ஒரே காரணத்திற்காகஈழ மண்ணில் லட்சக்கணக்கான எங்கள் தமிழ் உறவுகளை ஈவு இரக்கமின்றி கொண்று குவித்தது இலங்கை அதிகார வர்க்கம். அதனை தடுத்து நிறுத்தவே நெருப்பென தலைத்தூக்கி எங்கள் மண்ணை, மானத்தை, உரிமைகளை, உயிர்களை பாதுகாத்தவர்கள் எங்கள் போராளிகள். வீரம் செறிந்த அந்த விடுதலைப்போரட்டத்தில் அறுபத்தியெட்டாயிரம் பேர் தங்கள் உயிர்களை “தற்கொடை”களாக தந்து வீரமரணம் அடைந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஈடு இணையற்ற உன்னதமான தியாக தெய்வங்களை தொழுது, வணங்கும் நாளாக உலகம் முழுக்க வாழ்கின்ற தமிழர்கள் இந்த நவம்பர்  மாதத்தினையும் குறிப்பாக நவம்பர் 27ஆம் நாளையும் கடைப்பிடித்துவருகிறார்கள். இதனையறிந்திருந்தும் தங்களது விஜய் தொலைக்காட்சி  வருகின்ற அதே நவம்பர் 27ந் தேதி சிறப்புக்கொண்டாட்டமாக சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1 கலைஞர்களை கொண்டு சிங்கப்பூர் சண்டெக் சிட்டி (syntec city)யில் நிகழ்ச்சி நடத்த இருப்பதையறிந்து நான் மட்டுமல்ல உலகம் முழுக்க வாழ்கின்ற தமிழினம் சொல்லமுடியாத வருத்தத்தில் ஆழ்ந்திருப்பதை உங்களின் கவனத்திற்கு கொண்டு வரவே இக்கடிதத்தினை எழுதுகிறேன்.

மண் காக்க, இனம் காக்க இந்தியாவின் அகிம்சை வழி நின்று பணிரெண்டு நாட்கள் ஒரு சொட்டு நீர்கூட அருந்தமால் “சருகாகி” ஈழ மண்ணில் வீரமரணம் அடைந்தானே திலீபன். அந்த“தற்கொடை”யைப் போல் இன்னொரு மரணத்தை இந்த உலகம் வேறு எங்கேனும் தரிசனம் செய்ததுண்டா? எங்கள் மண்ணின் “நெல்லியடி” பள்ளியில் ஆயுதங்கள் குவித்து எங்களின் ஆயிரமாயிரம் உறவுகளை கொண்று புதைத்த சிங்கள இராணுவத்தை சிதறடிக்க தம் வாகனம் முழுக்க வெடிமருந்து நிரப்பி எதிரிகளின் கூடாரத்தை நோக்கிச் சென்று இடித்து எரிமலையாய் வெடித்து சிதறினானே மில்லர் இப்படியொரு மாவீரத்தை இந்த உலகம் வேறு எங்கேணும் கேட்டதுண்டா? இறுதியாய் தன் தாயை சந்தித்து “நான் காற்றோடு கலக்கப் போகிறேனம்மா” என்றவாறே விடைப்பெற்று எம் மக்களை அழிக்க காத்திருக்கும் ஆயுதம் தாங்கிய கப்பலை நோக்கி முப்பத்தாறு கடல் மைல்கள் (18 மைல்கள்) உடம்பில் கட்டிய வெடிமருந்தோடு நீந்திச்சென்று ஆயுத கப்பலின் அடிமடியை கட்டித்தழுவி அதிகார வர்க்கத்தினை தவிடு பொடியாக்கிய எங்களின் அங்கயற்கண்ணியின் பெரும் வீரத்தை இந்த உலகம் வேறு எங்கேனும் படித்ததுண்டா? இப்படி எத்தனையெத்தனை வீரச்சாவுகள். போர்க்களத்தின் விழுப்புண்ணோடு ஈழத்திலிருந்து கடல் வழியாக தமிழ் மண்ணின் மதுரைக்குஅழைத்து வரப்பட்டு மருத்துவம் பார்த்தும் பயன் இல்லாமல் என் தலைவனின் மடியில் கிடத்துங்கள்என கேட்டு அதன்படியே படுக்க வைத்து தன் தாயின் முகத்தை பார்ப்பது போல் தலைவரின் முகத்தைப் பார்த்து தம்பி…தம்பி… என ஆசையாசையாக அழைத்தபடி உயிரை விட்டாரே அண்ணன் சங்கர் அவர்களின் நினைவாகத்தான் 1990 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை கிட்டத்தட்ட இருபத்தைந்தாண்டுகளாக உலகம் முழுக்க மாவீரர் நாள் (நவம்பர் 27) தமிழர்களின்  எழுச்சி நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அப்படிப்பட்ட வீர தெய்வங்களை விதைத்த மாவீரர் துயிலும் இல்லங்களை இன்று இடித்துசிதலமாக்கி தூக்கி தூர எறிந்துவிட்டு அந்த இடத்தில் மைதானங்கள் அமைத்து தமிழர்களின் தலைகளை எட்டி எட்டி உதைப்பது போல் கால்பந்தாட்டங்கள் நடத்தி களியாட்டமாடிக் கொண்டிருக்கிறது சிங்கள அதிகார வர்க்கம். அவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள்.அப்படி செய்வதில் எங்களுக்கு ஆச்சரியமோ, அதிர்ச்சியோ இல்லை. ஆனல் நீங்கள் அப்படியில்லை. உங்களின் தொலைக்காட்சியை உலகம் முழுக்க வாழும் எங்களின் தமிழர் இல்லங்களில் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நடந்து ஆறு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இந்த உலகம் நீதி தராமல் இன்னும் எங்களை இழுத்தடித்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. இறுதி யுத்தத்தில் ஒன்றரை லட்சம் பேரும், ஒட்டுமொத்தமாக மூன்றரை லட்சம் பேரையும் பறிக்கொடுத்துவிட்டு சொல்லமுடியாத துயரத்தோடும் ரணத்தோடும் நின்றுக்கொண்டிருக்கும் தமிழினத்திற்கு நீங்களும் துன்பத்தை பரிசாக தரமாட்டீர்கள்  என நம்புகிறேன். இது எனது மன உணர்வு மட்டுமல்ல, உலகம் முழுக்க வாழ்கின்ற தமிழ் மீதும், தமிழ் மண் மீதும் பெரும் பற்றுக்கொண்ட மானமுள்ள தமிழர்களின் வேண்டுகோள்.

நீங்கள் இப்படி ஒரு ஏற்பாடே செய்யவில்லையென்றால் பரவாயில்லை. ஒரு வேளை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தால்தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்து, தங்களின் நிகழ்ச்சியினை மறுபரிசீலனை செய்து,மாவீரர் புனித நாளான நவம்பர் 27 ஆம் தேதியினை தவிர்த்து வேறு ஒரு தேதியில் வைத்துக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நல்ல பதிலுக்காக நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.

வ. கெளதமன்.

Views:
300
Article Categories:
India · News

Comments are closed.