தே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க அ.தி.மு.க., புது திட்டம்

Vijayakanth Tamil Nadu

சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., எந்த கூட்டணியில் இடம் பெற்றாலும், அதிக, ‘சீட்’ கேட்பதை தடுக்க, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வலை விரிக்க, ஆளுங்கட்சி திட்டமிட்டு உள்ளது.

கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெற்றது; 29 இடங்களில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஆனால், சில மாதங்களில், இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் வெடித்து, கூட்டணி முறிந்தது.இதையடுத்து, தே.மு.தி.க., – எம்.எல்.ஏ.,க்களை, ஆளுங்கட்சி பக்கம் இழுக்கும் பணி துவங்கியது. இதில், ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள் சிக்கினர். இந்நிலையில், லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., கணிசமான ஓட்டுகளை பெற்றது.

சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க.,வை வீழ்த்த, பலமான கூட்டணி அமைக்க, தி.மு.க., முயற்சித்து வருகிறது. முக்கியமாக, தே.மு.தி.க.,வை இழுக்க தீவிர முயற்சி நடக்கிறது. மேலும், பா.ஜ., மற்றும் மக்கள் நல கூட்டணியும், தே.மு.தி.க.,வை இழுக்க முயற்சிக்கின்றன.

இதற்கிடையில், ‘அ.தி.மு.க.,வை வீழ்த்த, எந்த தியாகத்திற்கும் தயார்’ என, விஜயகாந்த் முழங்கியது, ஆளுங்கட்சிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, எதிர்க்கட்சிகள் தரப்பில், தே.மு.தி.க.,வுக்கு இருக்கும் மவுசை குறைக்கவும்; வரும் தேர்தலில், அதிக, ‘சீட்’ பெறாமல் தடுக்கவும், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்களை மேலும் இழுக்க, ஆளுங்கட்சி முடிவு செய்துள்ளது. இப்பொறுப்பு, மூத்த அமைச்சர்கள் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

Views:
255
Article Categories:
India · News

Comments are closed.