பிணை கிடைத்தும் சிறையில் அடைக்கப்பட்ட 31 தமிழ் அரசியல் கைதிகள்! – அலைக்கழிக்கப்பட்ட அவலம்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளில் 31 பேர் இன்று பிணையில் விடுதலை ​செய்யப்பட்ட போதும், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிணை வழங்கும் நிபந்தனைகளை முழுமைப்படுத்தாததன் காரணமாகவே இவர்கள் மீண்டும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக இன்று காலை தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அவர்களை பிணையில் விடுதலை செய்வதற்கான அறிவித்தல் கிடைக்கப் பெறவில்லை என பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்ததன் காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

31 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிய விண்ணப்பத்தை நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யுமாறு அரச தரப்பு சட்டத்தரணிகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று பணிப்புரை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அனால் அவர்கள் நீதிமன்றத்துக்கு சமூகமளித்திருக்கவில்லை. இதனால் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு அரசியல் கைதிகள் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

இந்த நிலையில் இன்று பிற்பகல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது இவர்களை நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுதலை செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர். அதன்படி 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் இவர்களை விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பலப்பிட்டிய உத்தரவிட்டார்.

சந்கேநபர்களுக்கு வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ள தடைவிதித்ததுடன் அவர்களின் வதிவிட உறுதி சான்றிதழை நீதிமன்றில் சமர்பிக்கவும் நீதவான் உத்தரவிட்டார். எனினும் அவர்கள் வதிவிட உறுதி சான்றிதழை நீதிமன்றிற்கு வழங்காததன் காரணமாக பிணை வழங்கும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதனால் மீண்டும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். வதிவிட உறுதி சான்றிதழை நீதிமன்றிற்கு வழங்கிய பின்னர் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பிணை வழங்கப்பட்ட பின்னரும், 31 அரசியல் கைதிகளும், மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
tamil-detainees2
tamil-detainees1

Views:
219
Article Categories:
News · Sri Lanka

Comments are closed.