பேரறிவாளனுக்கு பரோல்: அற்புதம்மாளிடம் முதல்வர் உறுதியளிப்பு

Perarivaazhan

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு பரோல்வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவரது தாயார் அற்புதம்மாளிடம்முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

தலைமைச்செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், பேரறிவாளனுக்கு பரோல் வேண்டி முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்தேன். எனது கோரிக்கையை ஏற்று அதற்கான நடவடிக்கைகளை உடனே எடுப்பதாக உறுதியளித்துள்ளார். ஒருமாத காலம் பரோல் கேட்டுள்ளோம்.

எனக்கும், எனது கணவருக்கும் உடல்நலம் சரியில்லை. அதேபோல் எனது மகன் பேரறிவாளனுக்கும் உடல்நலம் குன்றியிருக்கிறது. இந்த பரோல் விடுமுறையில் மருத்துவம் பார்க்க வேண்டும். ஆகவே ஒருமாத காலம் பரோல் வழங்க நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் நம்பிக்கை அளித்து வழியனுப்பினார் எனத் தெரிவித்தார். கடந்த மாதம் அமைச்சர் சி.வி.சண்முகத்தை நேரில் சந்தித்து, பேரறிவாளன் பரோல் குறித்து அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார். பேரறிவாளன் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். அவர் அண்மைக் காலமாக உடல் நலக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Views:
258
Article Categories:
India · News

Comments are closed.