வீடியோ உள்ளே! – மாவீரர் தின அறிக்கை விசேட அணி தமிழீழ விடுதலைப்புலிகள் 2015

Tamil Tigers Heros Day Speach 2015

என்றென்றும் எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று கார்த்திகை திங்கள் 27 ஆம் நாள், மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள்.

ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக ஒளிர்ந்து தங்களை தாங்களே எரித்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள்.

அகிலம் அறிந்த மூத்த குடி தமிழ் குடிக்கு என்று, தனி நாடு கோரி தமிழீழ விடுதலைக்காய் தங்கள் உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை மெய், ஆன்மா ஒன்று சேர மனதில் நிலை நிறுத்தும் வருடத்தின் அந்த ஒரு புனித நாள்.

எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள். எதிரிக்குத் தலைவணங்காத வணங்கா மன்னர்கள். எமது தேசவிடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த, மாவீரர் அனைவரும் மனிதமலைகளாக, மனிதக்கோட்டைகளாகவே எமது மண்ணைக் காத்துநின்றவர்கள்.

விடுதலைப்போராட்ட தீயை ஓங்கி வளர்ப்பதற்கு என்று தங்கள் உடல், உயிர், ஆன்மா, குருதியை தாரை வார்த்து கொடுத்தவர்கள். அகிலம் எங்கும் வாழும் ஒவ்வொரு தமிழ் மக்களினதும் உற்ற உறவுகளாய்  பெற்றோர்களாக, சகோதரர்களாக, உடன் பிறப்புக்களாய் எங்களுடன் வாழ்ந்தவர்கள்.

ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டு இருந்த தமிழ் மக்களின் முதுகெலும்பை நிமிர வைத்து வாழ வழி சமைத்த வீரர்கள்.

இவர்கள் தரை கரும்புலிகளாக, ஆகாய கரும்புலிகளாக, கடல்புலிகளாக வேவுப்புலிகளாக, தரைச்சமர்களில் கடல் சமர்களில் மற்றும் வான் சமர்களில் தங்கள் காவியங்களை செங்குருதியால் எழுதிய வீர மறவர்கள்.

காலங்காலமாக ஆண்ட தமிழ் இனத்தை அடக்கி ஆழ நினைத்த சிங்கள கொடுங்கோலாட்சிக்கு முடிவு கட்ட எண்ணி, சிங்களத்தை அடக்க வீறு கொண்டு எழுந்தவர்கள். நேரம், காலம், இடம் பொருள், ஏவல் என்று எதனையும் வேறுபடுத்தி பார்க்காமல் ஈரைந்து மாதங்கள் கருவிலே காவி வளர்த்த தாயை பார்க்கினும் எங்கள் தாய் நாடே தலை சிறந்தது என்று எண்ணி தங்கள் உயிரை நஞ்சுக்குப்பியில் காவித்திரிந்தவர்கள்.

தானைத்தலைவனின் சிறு கண்ணசைவில், பாய்ந்து எதிரிகளை துவம்சம் செய்தவர்கள். இவர்கள் வேறு யாருமல்ல, இந்த மாவீரர்கள் தமிழ் தாயின் மடியில் பிறந்த வீரர்கள். அவர்கள் உங்களின் சகோதரர்கள், சகோதரிகள், பெற்றோர் ஆவார்கள். இந்த வீர மறவர்களின் ஈகைக்கும் தியாகத்திற்கும் இந்த பூமிப்பந்தில் ஈடு இணை ஏதும் கிடையாது.

தமிழீழ விடுதலைப்போராட்டம் தனது காலத்தில் எந்த ஒரு தனி நபரையும் ஆசை காட்டியோ அன்றி கவரவேண்டும் என்று எண்ணியோ போராட்டத்தில் இணைத்துக்கொண்டதில்லை. அத்தகைய ரீதியில் இந்த விடுதலைப்போராட்டம் மாறுபட்டதும் புனிதமானதும் ஆகும். தமிழ் மக்களின் பாரம்பரியம், அடிப்படை-உரிமை மற்றும் அரசியல் தேவை என்பனவற்றை உணர்ந்தே இந்த வீரர்கள் தங்களை இந்த விடுதலைப்போராட்டத்திற்கு அர்ப்பணித்தவர்கள் ஆவார்கள்.

இந்த விடுதலைப்போராட்டம் சாதி, மதம், பிராந்தியம் மற்றும் கல்வி என்று எந்த ஒரு வேறுபாட்டையும் கொண்டிராமல், அனைத்து ஆண் பெண் போராளிகளையும் ஒரே பாதையில் வீறுநடை போடவைத்தது. இந்த வீர மறவர்கள் தங்கள் உன்னதமான உயிரை தங்களின் தாயக மண்ணிற்காகவே அர்ப்பணித்தார்கள், தவிர தனது குடும்பம் தனது சாதி மற்றும் தனது சமூகம் என்று எதுவித வித்தியாசங்களையும் பார்க்கவில்லை.

எம் தமிழ் மாவீரர்களே, உங்களின் உயிர் தற்கொடைகள் எதுவும் வீண் போகாது. இது என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் செங்குருதியினால் எழுதப்பட்ட ஒரு சிறப்பு காவியமாகும். என்றென்றும் தமிழ் மக்களின் முதல் வணக்கம் மாவீரர்களுக்கே உரித்தானது. நாம் மாவீரர்களை மீண்டும் தலை வணங்குகின்றோம். தொழுகின்றோம்.

எங்கள் அன்பார்ந்த மக்களே!

தாயகத்தில் சிங்கள இனவாத அரசு இன்றும் மிருகத்தனமான வன்முறைகளைக் கைக்கொண்டு  கோரத்தாண்டவமாடுகிறது. எழுபது ஆண்டுகளுக்கு மேலாக வன்முறை அகன்ற அகிம்சை வழியிலும், ஆயுதவழியிலும் தமிழர் நீதிகேட்டபோதும் சிங்கள உலகிலே எள்ளவேனும் மனமாற்றம் நிகழவில்லை. எத்தனையோ இழப்புக்கள், எத்தனையோ அழிவுகள், எண்ணற்ற உயிர்ப்பலிகள் நிகழ்ந்தபோதும் சிங்களத் தேசம் மனந்திருந்தவில்லை.

தமிழர் பாரம்பரிய பூமியை, தமிழனின் செங்குருதியால் நனைத்த சிங்கள கொடுங்கோல் வல்லாதிக்க அரசு, தனது கொடுங்கோல் ஆட்சியின் ஊடாகவும் தனது நட்பு நாடுகளின் பூரண தொழில்நுட்ப மற்றும் அரசியல் தொடர்புகள் ஊடாகவும் தமிழீழ விடுதலை போராட்டத்தை 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவர விரும்பி, வகைதொகையின்றி பல்லாயிரகணக்கான தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் கொத்து கொத்தாக கொன்று குவித்து தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டத்தை மௌனிக்க வைத்தது.

2009 ஆண்டின் பின்னர், தமிழ் மக்களுக்கு தேவையான அமைதியை தாங்கள் தான் வழங்கியதாக கூறிக்கொள்ளும் இச்சிங்கள அரசுகள் தொடர்ச்சியாக தமிழர்களை மாற்றான் மனப்பாங்குடனேயே நடத்தியும் வருகின்றன. ஒருபுறத்தில் தமிழ் மக்களின் அடிப்படை மற்றும் அரசியல் தேவைகளை பூர்த்திசெய்வதனை புறந்தள்ளி, சர்வதேச புலம் பெயர் முனைப்புக்களையும் முடக்க தீவிரமாக முயன்றுவருகின்றது.

யுத்த பாதிப்புக்கள் தமிழ் மக்களின் மனங்களில் மாறா வடுவாக இருக்க, ஆளும் கட்சியின் சகலவிதமான புறக்கணிப்புக்களுக்கு மத்தியிலும் எம் தமிழ் சமூகம் தாயகத்தில் பெரும்பாலான சவால்களை எதிர்கொண்டு வருகின்றமை கண்கூடான செயலாகும்.

இலங்கை தீவில் தமிழர்களை கருவறுக்கும் முயற்சியில் சிங்களம் தங்கள் அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகையில் எங்கள் தமிழ் அரசியல் தலமைகளும் இந்த நிலைக்கு துணைபோவது மிகவும் கொடிய ஒரு நிகழ்வாகும். எது எப்படி இருப்பினும் இந்த தடைகளின் அப்பாலும் தமிழர்களின் வேட்கை மேலும் மேலும் உறுதியாவது திண்ணம்.

எங்கள் அன்பார்ந்த மக்களே!

தாயகம் வேண்டி போராடும், போர்க்குணம் மிக்க ஒரு இனமாக தமிழ் மக்களின் விடுதலைக் குழந்தைகள் ஆன தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்து வருகின்றார்கள். இதேவேளை தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் பிரதி நிதிகளாக இருந்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஐனநாயக போராளிக் குழுவாகும்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறுண்டு ஒற்றுமையின்றி காணப்பட்ட தமிழ் அரசியல் குழுக்கழுக்கு வடிவம் கொடுத்து செதுக்கி எடுக்கப்பட்ட ஒரு கட்டமைப்பே இந்த தமிழ் தேசிய  கூட்டமைப்பு ஆகும். அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி என்பதோடு விடுதலைப்புலிகளின் ஐனநாயக முகம் என்றும் கூறிக்கொள்ளவேண்டும்.

எடுத்த கொள்கையில் உறுதியும் தொலை தூர நோக்கமும் கொண்டு விடுதலைப்புலிகளினால் பெற்றெடுக்கப்பட்ட கூட்டமைப்பு எனும் குழந்தை தற்போது பிறன்மனையில் வளர ஆரம்பித்துள்ளது. இந்த நிலை பெற்ற அன்னையையே கேள்வி கேட்கும் ஒரு நிலைக்கும் இன்று தள்ளிவிட்டுள்ளது.

உருண்டோடும் காலச்சக்கரத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, அரசியல் ஆசை கொண்டவர்கள் சிலரின் மகுடிக்கு மயங்கியுள்ளது. தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள எந்தவொரு மானமுள்ள தமிழ் மகனும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கலாம், மக்களுக்காக போராடலாம். ஆனால் தமிழ் மக்களின் வாக்குகளை விற்று தங்கள் வங்கி நிலுவைகளை சரிசெய்யும் ஒரு செயலையும் தமிழ் மக்களோ அன்றி விடுதலைப்புலிகளோ ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

தாயகத்தில் களம் அமைத்துள்ள தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் 2009 ஆம் ஆண்டின் பின்னர் ஒன்று திரண்டு சிறுபான்மை தமிழ் மக்களுக்கு என்றொரு தீர்வை நோக்கியே நகரவேண்டும். இந்த அரசியல் போக்கு தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் தேவை என்ன என்று உலகிற்கு பறைசாற்றுவதோடு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் வெளிப்படுத்தும்.

புலம் பெயர் நாடுகளிலும் தாயகத்திலும் வாழும் ஒவ்வொரு வீரத் தமிழ் குடிமக்களும் தங்களின் அரசியல் தேவை தனியான தமிழீழம் தான் என்று காலம் காலமாக உறுதியுடன் நம்புகின்றனர். இந்த நிலையில் தமிழ் மக்களின் பிரதி நிதிகள் சிங்கள அரசின் போக்கிற்கு சென்றுவிடாமல் மக்களின் தேவைகளை வலியுறுத்திய வண்ணம் பாராளுமன்றத்தில் தங்கள் குரலை ஓங்கி ஒலிக்க வைக்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்த்தி அழகு பார்ப்பதும் சிங்கள அரசின் ஒரு இராஐ தந்திர நடவடிக்கையாகும். எதிர்கட்சிக்கு பொருத்தமாக சிங்கள கட்சி ஒன்று தகமை பெற்ற நிலையில் அரசியல் உரிமைகளை தமிழர்களுக்கு தராத சிங்கள அரசுகள் இலங்கைத்தீவில் தமிழ் மக்களுக்கு ஐனநாயக உரிமை வழங்கப்பட்டுள்ளதாக காட்டி சர்வதேசத்தை ஏமாற்றும் ஒரு படிநிலையாகவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி பதவி வழங்கியுள்ளது.

எங்கள் அன்பார்ந்த மக்களே!

தமிழீழ விடுதலைப்புலிகள் எனும் பெரும் விருட்சத்தை வெட்டி வீழ்த்த எண்ணியவர்களையும் குறிப்பிட்டு காட்டுவது காலத்தின் இன்றைய தேவையாகவுள்ளது.

தங்கள் அற்ப சுயநலத்தேவைக்காக விலை போய் மாவீரர்களின் தியாகத்தை அரசியலாகவும் பணமாகவும் மாலைகளாகவும் மாற்றி தடம்புரண்ட தமிழர்கள் சிலரின் வாழ்க்கை இன்று பெரும் கேலிக்குள்ளாகியுள்ளது கேள்விக்குறியாகியுள்ளது. தடம்புரண்ட புதிய பாதையே நிரந்தரமானது என்ற எண்ணத்தில் விடுதலைப்புலிகளின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும், மக்களையும், மாவீரர்களின் தியாகத்தையும் தங்களின் சொகுசு படுக்கையாக்கி சுகம் கண்டவர்களின் வாழ்க்கை, அவர்களின் வாழ்க்கை இன்று முள்படுக்கையை நோக்கியே செல்லுகின்றது.

நிரந்தரமானதும் அசையாத உறுதிகொண்டதும் ஆன தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கைக்கு மாறாக சென்றவர்கள் ஒருபோதும் மீண்டும் தமிழ் எனும் கொள்கையில் தாயகம் திரும்பிவிட முடியாது இதேவேளை, இவ்வாறு தடம் புரண்டு எதிரிகளுடன் கை கோர்த்தவர்களுக்கு இலங்கை அரசுகள் என்றும் ஒரு இடம் வழங்கி விடமாட்டாது. இந்த நிலை தெரியாமல் அன்று கொள்கை மாறியவர்கள் இன்று உள்ளத்தாலும் உடலாலும் அழுது வடித்துக்கொண்டு இருட்டில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய துரோகிகளை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பும் தமிழீழ மக்களும் என்றும் மன்னிக்க மாட்டார்கள்.

எங்கள் அன்பார்ந்த மக்களே!

இந்த வருடம் இடம்பெற்ற அரச அதிபர் தேர்தலில் பாரிய மாற்றம் ஏற்படும் என்றும், இந்த மாற்றமே தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக ஒரு தீர்வையும் வழங்கும் என்றும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. தமிழ் மக்களையோ அன்றி தமிழீழ விடுதலைப்புலிகளையோ பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கு எதிராக தீவிர மற்றும் கடும்போக்குகளை கொண்டுள்ள முன்னாள் அரச அதிபர் மஹிந்த ராஐபக்சவோ இந்நாள் அரச அதிபர் மைத்திரிபால சிறிசேனவோ எந்த தீர்வையும் தந்துவிடப்போவதில்லை. இந்த நிலைப்பாடுகள் கடந்த பல வருடங்களாக தமிழீழ விடுதலைப்புலிகளினால் பல்வேறுபட்ட அரசியல் தளங்களில் இடித்துரைக்கப்பட்ட ஒன்றாகும்.

இந்த நிலையிலேயே இந்த வருடம் அரச அதிபர் தேர்தல் இடம்பெற்று புதிய அதிபர் பதவிக்கு வந்துள்ள நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. ஆயினும் தமிழ் மக்கள் வாழ்வாதாரத்திலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எனப்படுவதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படாமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் இடம்பெற்ற அரச அதிபர் தேர்தல் தொடர்பில் புதிய அரசு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை நிறைவேற்ற ஆரம்பத்தில் 100 நாட்கள் கேட்டிருந்தது. இந்த நிலையில் வருடத்தின் பிற்பகுதியில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் காலம் வரை குறித்த வாக்குறுதிகள் காப்பாற்றப்படாமலே காலத்தையும் இழுத்தடித்துள்ளது.

குறித்த பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று தமிழ் மக்களுக்கு அறைகூவல் விடுக்கப்பட்ட நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் சில மைத்திரி ரணில் அரசுக்கு ஏதுவாக தங்கள் பிரச்சார செயற்பாடுகளை மேற்கொண்டு தமிழ் மக்களிடம் இருந்து வாக்குகளைப்பெற்று தமிழ் மக்களுக்கு மேலும் துரோகம் இழைத்துள்ளனர்.

கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற தேர்தல்களும், தேர்தலில் பங்கு எடுத்து, தமிழ் மக்களின் வாக்குகளினால் பாராளுமன்றம் சென்ற தமிழ் அரசியல் கட்சிகளும் சிங்கள ஏகாதிபத்திய அரசியல் கட்சிகளின் உத்தரவாதங்களை நம்பி பாராளுமன்றத்தில் இருந்து மக்களுக்கு என்று கொண்டு வந்தது எதுவும் இல்லை. அக்கட்சிகள் வெறுங்கையுடன் திரும்பி வந்த நிலையிலேயே தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ஒரு பாடமாகவும் சர்வதேச உலகிற்கு தமிழர்கள் நாம் கொடுக்கும் ஒரு செய்தியாக இந்த தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் தமிழ் மக்களின் குரலாக இருக்கவேண்டும் என்பதே தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கமாக இருந்தது. இருக்கின்றது. ஆனால் தமிழ் அரசியல் கட்சிகளோ ஆசை காட்டி மோசம் செய்யும் சிங்கள ஏகாதிபத்திய அரசியல் தலமைகளுக்கு ஏதோ ஒருவகையில் அடிமைப்பட்டுகொண்டே இருப்பது தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

எங்கள் அன்பார்ந்த மக்களே!

இது மட்டும் அல்லாமல், சர்வதேசத்தை ஏமாற்றும் அளவுக்கு இந்திய மற்றும் இலங்கை அரசுகள் மேற்கொண்ட இந்திய பிரதமரின் வடக்கு விஐயமும் உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் பலதரப்பட்ட அளவில் உள்ள நிலையில், வடக்கில் இடம்பெற்ற வீடு கையளிப்பு நிகழ்வு தமிழ் மக்களை முற்றாகவே ஏமாற்றிவிட்டுள்ளது.

இந்திய பிரதமரின் இலங்கை விஐயத்தின்போது தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக மக்களினதும் தமிழ் அரசியல் கட்சியின் முகத்தில் கரிபூசும் முகமாகவே இந்த விஐயத்தை இலங்கை அரசு திட்டமிட்டு நடத்தியுள்ளது.

தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் இந்திய நடுவண் அரசிடம் முறையிடுவோம்; என்று கூறிவரும் தமிழ் அரசியல் தலைமைகளும் இந்திய பிரதமரின் வடக்கு விஐயத்தை முற்றுமுழுதாகவே நழுவ விட்டு மக்களையும் ஏமாற்றியுள்ளனர்.

எங்கள் அன்பார்ந்த மக்களே!

2009 ஆம் ஆண்டில் இலங்கை அரசின் முன்னாள் அரசு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐநா மன்றில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒரு அடைவை அடைந்திருந்தது.

இதேவேளை கடந்த பங்குனி மற்றும் புரட்டாதி மாதங்களில் இடம்பெற்ற ஐநா மன்ற மனித உரிமை பேரவை அமர்வுகளுக்கு இலங்கையிலிருந்து nஐனிவா சென்ற தமிழ் அரசியல் குழுக்கள் தங்கள் வரவை உறுதிப்படுத்தியிருந்தாலும், இக்கட்சிகளின் பிரசன்னம் இவர்களின் ஒற்றுமையை nஐனிவாவில்; பிரதிபலிக்கவில்லை. இந்த நிலை சர்வதேச அளவில் தமிழ் மக்களின் பிரதிபலிப்பை வேறு ரூபத்தில் வெளிப்படுத்தியிருந்தமை, தற்போது தமிழ் மக்களுக்கு என்று ஒரு உறுதியான தலைமை இல்லை என்பதனையே காட்டுகின்றது.

இலங்கையின் முன்னாள் அரசு, தமிழ் மக்களின் ஒற்றுமையை குலைக்கும் முகமாகவே புலம் பெயர் அமைப்புக்களை தடை செய்து அறிவிப்பை வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக புதிய அரசும் அந்த தடையை கடைப்பிடித்து வருவதுடன் தனிப்பட்ட ரீதியில் புலம்;பெயர் அமைப்புக்களுடன் இரகசிய பேச்சுக்களை ராஐதந்திர ரீதியில் நடத்தி தமிழ்க்குழுக்களின் ஒற்றுமையை விலைபேசி வருகின்றதையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

எங்கள் அன்பார்ந்த மக்களே!
எம் விடுதலைப்போராட்டத்தில் தங்கள் உயிரையும் உடலையும் மண்ணுக்கும் தமிழுக்கும் அர்ப்பணித்த மாவீரர்களின் தியாகம் ஒன்றே எங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும். இந்த வீரர்கள் எங்கள் தமிழ் உறவுகளே. இவர்கள் உங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளே. தாயகத்தில் விடுதலைப்புலிகளை ஒடுக்க எண்ணி, இலங்கை கொடும் கோலரசு கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்த சர்வதேச ரீதியிலான எதிர்ப்பு பிரச்சாரம் தற்போது பொலிவிழந்துபோய்விட்டது.

இந்த பிரச்சாரம் பொலிவிழந்தமை மற்றும் காலாவாதி அடைந்தமைக்கு, எம் தமிழ் மக்களின் தியாகங்களும் அர்ப்பணிப்புக்களும் தான் காரணம் என்றால் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

மேலும் இந்த எதிர்ப்பு பிரச்சாரத்தில் எங்கள் தமிழ் சமூகத்தினரையே தமிழ் மக்களுக்கு எதிராக பாவித்து வந்தமையும் அத்தகையவர்கள் அற்ப சொற்ப சலுகைகளுக்காக தங்கள் இனத்தை அடகு வைத்தமையும் வரலாற்றில் மிகவும் கண்டிக்கதக்க ஒரு செயலாகும்.

எங்கள் அன்பார்ந்த மக்களே!

புலம் பெயர் தமிழ் சமூகம் தாயகத்து தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள உறவே இன்றும் உலகமெங்கும் பேசப்படுகின்றது. விழ விழ எழுவோம் என்று தாயகத்து தமிழ் மக்களுக்கு எமது உறவுகள் கொடுக்கும் உதவிகள் அளப்பரியது. இலங்கை அரசு தாயகத்தில் தமிழ் மக்களை முற்றிலும் கைவிட்ட நிலையில் போர் பாதிப்புக்களுக்கு உள்ளான மக்களுக்கு எமது உறவினர்கள் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் புலம் பெயர் நாடுகளில் சிலர் தாயகத்தில் தமிழ் மக்களுக்கு நல்லது செய்வதாக கூறி விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெயரில் பெருமளவு பணத்தினை கேசரிப்பதும் அதனை மக்கள் தேவைக்கு பாவிக்காமல் தங்களின் சொந்த தேவைகளுக்கு பாவித்து வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. மக்களுடைய தேவைகள் கைவிடப்பட்டு மக்கள் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளமை கண்டிக்கதக்கது. 2009 ஆண்டின் முன்னர் ஒரு நிர்வாகத்தின் கீழ் மிகவும் திறம்பட பாரிய கட்டமைப்புக்களை செய்து வந்த விடுதலை இயக்கம் தற்போது கொண்டுள்ள சிறு சிறு கருத்து முரண்பாடுகள் மற்றும் ஏமாற்ற குணங்கள் ஆகியவைற்றினால் தனித்து இயங்கி வருவது மேலும் எம் தமிழ் மக்களுக்கு மட்டுமே பாதிப்பை கொடுத்து வருகின்றது.

இந்த தனித்து நிற்கும் நிலை முற்றிலும் ஒழித்துக்கட்டப்படவேண்டியதே. இந்த பிளவுகள் எதிரிகளுக்கு மட்டுமே சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. எமது தமிழ் சமூகத்திற்கு பிரயோசனமாக அமையாது உள்ளது.

30 வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த துப்பாக்கிகள் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மௌனித்தபோது எமது விடுதலைப் போராட்டம் எதாவது ஒரு வகையில் மிகவும் சிறந்த முறையில் சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்டு மக்களின் விடுதலை நோக்கி நகரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. வரலாற்றில் இடம்பிடித்துள்ள விடுதலைப்புலிகளின் யுத்தம் அறவே மழுங்கிவிடும் என்று எதிர்பார்த்து அற்ப சொற்ப விடயங்களுக்கு ஆசைப்பட்டு பாதை மாறிச் செல்லும் அற்பர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவும் அமைகின்றது.

எமது இனத்தின் விடுதலைப்பயணம் மிக விரைவில் தான் சென்றடையே வேண்டிய இலக்கினை அடையும். இது உறுதி. அந்த உன்னத வேளையின் போது, தமிழ் ஈழ விடுதலைக்கு எதிராக வரலாற்று தவறுகள் செய்பவர்களும், அவர்கள் தம் சந்ததியும், தலை குனிவை சந்தித்து, எம் தமிழ் மக்கள் உறவுகளால் புறந்தள்ளப்பட கூடாது, இதுவே எமது விருப்பம். நீண்ட காலமாக போராட்ட தேரை வடம் பிடித்து இழுத்தவர்கள் ஏதோ இனம்புரியாத காரணத்தினால் தடம் மாறி செல்வது அனுமதிக்க முடியாதது ஆகும்.

எங்கள் அன்பார்ந்த மக்களே!

தாயக விடுதலைக்காகவும் எம் தமிழ் மக்களின் சுதந்திர விடியல் தேடி களமாடி உயிரை நீத்த மாவீரர்களை நினைவு கூரும் இன்றைய நாளில் நீங்கள் அனைவரும் உங்கள் மனங்களில் சுதந்திர தமிழீழத்திற்காக என்ன செய்தீர்கள் என்பதனை மீட்டு பார்க்கவும் வேண்டப்படுகின்றீர்கள்.

2009 ஆண்டின் பின்னர் இலங்கை அரசு எம் தமிழ் சோதரங்கள் மீது மேற்கொண்டு வரும் பல்வேறு பட்ட மறைமுக வேலைத்திட்டங்களால் நாம் அனைவரும் எம்மை அறியாமலேயே பிரிந்து தான் வாழ்ந்து வருகின்றோம். இந்த இன்னல் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் இந்த பிரிவுகள் என்பது நிரந்தரமல்ல.

மிகவிரைவில் நாம் அடையவுள்ள மீள் வேகம் கொள்ளும் சர்வதேச மயப்பட்ட அரசியல் தாயக விடுதலைப்போரில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும்.

தமிழர்கள் மீது இலங்கை அரசு விதித்துவரும் கடுமையானதும் மிகவும் மோசமானதுமான இன்னல்கள், மிகவிரைவில் ஆதவனைக்கண்ட பனிப்புகார்போல விலகுவது திண்ணம். அதேவேளை எமது தமிழ் ஈழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிராக காளான்கள் போல் அங்கு ஒன்றுமாய் இங்கு ஒன்றுமாய் முளைத்திருக்கும் துரோகிகளும் எதிரிகளும் நிச்சயம் அழிந்துபோவார்கள். அழிக்கப்படுவார்கள். அவர்களின் சந்ததி மிகவும் கொடிய பழிச்சொல்லுக்கு ஆளாகும்.

எமது சமூகத்திற்கு எதிராக திரும்பியவர்கள் எமது விடுதலைப்போராட்டத்திற்கு வித்தாகி விருட்சமாகிய மாவீரர்களின் முன்னால் புல்லாகி போவார்கள். மாவீரர்களின் தியாகம் மாறாது, அழியாது.

எங்கள் அன்பார்ந்த மக்களே!

தமிழீழ விடுதலைப்போராட்டம் என்பது தனக்கே உரிய பாதையில் வீறு நடைபோட்டு சென்று கொண்டிருந்த வேளையில், வேறு பல நாடுகளில் நிலை கொண்டிருந்த சர்வதேச பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் என்று வகைப்படுத்தப்பட்ட அமைப்புக்களுடன் தாயக விடுதலைப்போராட்டத்தை ஒப்பிட்டமை எமது விடுதலைப்போரிற்கு ஒரு இருண்ட காலமே ஆகும்.

சர்வதேச அளவில் இயங்கிக்கொண்டிருந்த சில அமைப்புக்கள் தங்கள் நாடு தவிர்ந்த வேறு பல நாடுகளில் கொண்ட தீவிரவாத செயல்பாடுகள் அந்த அமைப்புக்கள் மீதான வல்லரசுக்களின் இராணுவ மற்றும் அரசியல் செல்வாக்குகளை செலுத்த வைத்தன. ஆனால் விடுதலைப்புலிகள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தங்கள் போராட்ட களத்தினை சர்வதேச அளவிற்கு விரிவு படுத்த முனைந்தது இல்லை. எனினும் இலங்கை அரசு விரித்த கொடிய மாய வலையில் சர்வதேசம் சிக்கிக்கொண்டமை எப்படி என்றும் ஏன் என்பதும் இன்னமும் தமிழ் மக்களுக்கு புரியவில்லை.

2009 ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக சர்வதேச உலகம் இலங்கையுடன் கைகோர்த்த பாரதூரமான குற்றத்திற்கு பரிகாரமாகவே இலங்கையை சர்வதேசம் தனது அணியில் இருந்து தற்போது கழற்றிவிட்டுள்ளது. பாரியதும் ஏராளமான சிறப்பு பண்புகளை கொண்ட தமிழ் இனத்தை அழிப்பது என்பது எந்த ஒரு நாட்டினாலும் செய்துவிடமுடியாது. ஆயினும் தமிழ் மக்களின் புத்திக்கூர்மையும் பாரம்பரியமும் இந்த பூவுலகில் இருந்து மறைத்துவிட முடியாத சூழலில் உலக நாடுகள் மீண்டும் தமிழர்களுக்கு கைகொடுக்கும் என்று நாம் நம்பிக்கை வைக்கவேண்டும்.

இன்றைய, இந்த சர்வதேச அளவில் அடையாளம் காணப்பட்ட எமது தேவையினை பூர்த்தி செய்ய, எமது பாதையில் இருந்து விலகிச்சென்றுள்ள புலம் பெயர் நாடுகளில் இருப்பவர்களும் தாயகத்தில் உள்ளவர்களும் எங்கள் மாவீரர் தியாகத்தையும் தாயக தமிழர்களையும் நினைவில் நிறுத்தி ஒன்று திரள வேண்டும்.

என்றென்றும் இந்த பூமிப்பந்தில் எங்கள் மாவீர செல்வங்களின் தியாகம் நிலைத்திருக்கும்.
தாயகம் மலரும்.

கனவு நனவாகும். இது நிச்சயம்.

தலமை அலுவலகம், விசேட அணி, தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம் நவம்பர் 27, 2015.

Views:
347
Article Tags:
Article Categories:
India · News · Sri Lanka · World

Comments are closed.