வெளுத்து வாங்கிய கனமழை – நிரம்பி வழியும் வீராணம் ஏரி: வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்

Viraanam Yeri Tamil Nadu

காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழைகொட்டி தீர்த்தது. குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாயினர்.

வடகிழக்கு பருவமழை கடந்த 28–ந் தேதி பெய்யத் தொடங்கியது. இதையடுத்து வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்தமழை பெய்துவருகிறது. கடலூர் மாவட்டத்திலும் கனமழை பெய்தது. குறிப்பாக கடலோரப் பகுதி கிராமங்களில் பலத்த மழை பெய்தது.

இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதால், வடகடலோர மாவட்டங்கள் மற்றும் எஞ்சிய மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், அப்போது மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி. நேற்று அதிகாலையில் இருந்தே பலத்த காற்றுடன் மழை பெய்தது. மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் அதிகாலையில் இருந்து இடை விடாமல் பெய்ய தொடங்கியது.

பலத்த மழையின் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ஆக்ரோஷத்துடன் பொங்கி எழுந்த கடல் அலையானது பல அடி தூரத்துக்கு கரையை நோக்கி சீறிப் பாய்ந்தது. இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பலத்த காற்றுடன் மழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. காற்றின் வேகம் குறைந்த பின்னர் படிப்படியாக மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.

கடலூர் மட்டுமின்றி சிதம்பரம், பரங்கிப்பேட்டை, லால்பேட்டை, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, குப்பநத்தம் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. தாழ்வான பகுதிகளிலும், விளைநிலங்களிலும் மழைநீர் தேங்கியதால் கடலூர் மாவட்டமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

மழை நிலவரம் தொடர்பாக இன்று கடலூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்குள்ள 28 கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாகவும், மழையினால் சுமார் 400 குடிசை வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், இன்று காலை நிலவரப்படி, மழை, வெள்ளம் சார்ந்த விபத்துகளில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக அண்ணாமலை நகரில் 158.40 மில்லிமீட்டர் மழை பதிவானது. மற்ற பகுதிகளில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்):-
சிதம்பரம் 155.50, கடலூர் 136.60, பரங்கிப்பேட்டை 109, லால்பேட்டை 87, சேத்தியாதோப்பு 84, வானமாதேவி 83.60, புவனகிரி 82, கொத்தவாச்சேரி 77, பண்ருட்டி 67, குப்பநத்தம் 57, கீழச்செருவாய் 53, காட்டுமன்னார்கோவில் 51, பெலாந்துறை 50, மேல்மாத்தூர் 46, காட்டுமயிலூர் 36, விருத்தாசலம் 34, ஸ்ரீமுஷ்ணம் 33, லக்கூர் 31.20, வேப்பூர் 28, தொழுதூர் 27 மிமீ.

மாவட்டம் முழுவதும் சராசரி மழையாக 70.78 மில்லிமீட்டர் பதிவாகியிருந்தது.

தொடர் மழையால் மாவட்டத்திலுள்ள வீராணம் ஏரி, பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி, வெலிங்டன் நீர்த் தேக்கம் உள்ளிட்ட நீர்நிலைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.

குறிப்பாக, நண்பகல் 12 மணி நிலவரப்படி வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவா 47.5 அடிக்கு ஒருஅடி குறைவாக 46 அடியை நீரின் தற்போதைய கொள்ளளவு எட்டியுள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் புதிய மதகின் வழியாக ஏரியில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வீராணம் ஏரியின் அருகாமையில் அமைந்துள்ள சிறூநாரையூர், நந்திமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தென்பெண்ணை ஆற்றிலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதையடுத்து ஆற்றிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views:
270
Article Categories:
India · News

Comments are closed.