வெள்ளக்காடானது யாழ்ப்பாணம்! – 21,437 குடும்பங்கள் பாதிப்பு

யாழ். குடாநாட்டில் இன்று அதிகாலை வரை கொட்டித் தீர்த்த கனமழையினால், திரும்பிய இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. யாழ்.மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் மூன்று தினங்களாக பெய்த கனமழையினால் மாவட்டத்தில் தாழ்நில பகுதிகளிலிருந்து வெள்ளத்தினால் இடம் பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 21,437ஆக உயர்ந்துள்ளது.

வடமாகாணத்தில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்த நிலையில் தாழ்நிலப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அதிகளவில் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை தொடக்கம் இன்று அதிகாலை வரை கனமழை பெய்த நிலையில் பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற சேதங்கள் தொடர்பில் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ச.ரவி தெரிவிக்கையில், மாவட்டத்தில் 14 பிரதேச செயலர் பிரிவுகளிலும், மொத்தமாக 21437 குடும்பங்களை சேர்ந்த 76673 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இதேவேளை மாவட்டத்தில் 118 வீடுகள் முழுமையாக சேதமடைந்திருக்கின்றன. மேலும் 1812 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருக்கின்றன.

இன்றைய தினம் கனமழை தணிந்திருக்கும்போதும் வெள்ளநீர் வழிந்தோடாத நிலை தொடர்கின்றது. இதனால் மக்கள் மீளவும் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப முடியாத நிலை காணப்படுகின்றது. மேலும் வெள்ள நீர் வழிந்தோடுவதற்கு மேலும் காலதமாதமாகலாம் இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

jaffna-flood3

jaffna-flood2

jaffna-flood1

Views:
268
Article Tags:
Article Categories:
News · Sri Lanka

Comments are closed.