Breaking News
Home / News / India / வைகோவின் தாயார் காலமானார்! – சீமான் இரங்கல்
Vaiko Mother Died

வைகோவின் தாயார் காலமானார்! – சீமான் இரங்கல்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாயார் மாரியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் (வயது 96). இவர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு வயோதிபம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இவரை பாளை ஐகிரவுண்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரை வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் அருகில் இருந்து கவனித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 9.15 மணியளவில் மாரியம்மாள் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இந்த தகவல் சென்னையில் இருந்த வைகோவிற்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் விமானம் மூலம் நெல்லை புறப்பட்டு வந்தார்.

மரணமடைந்த மாரியம்மாளின் கணவர் வையாபுரி. இவர் பல வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு வைகோ, ரவிச்சந்திரன் என்ற 2 மகன்களும் 4 மகள்களும் உள்ளனர்.

வைகோ மாணவர் பருவத்தில் தி.மு.க.வில் ஈடுபட்டதற்கு வைகோவின் தாயாரும் ஒரு காரணமாகும். பின்னர் தி.மு.க.வில் இருந்து பிரிந்து தனி கட்சி தொடங்கிய போதும் மாரியம்மாளிடம் ஆசி பெற்றே வைகோ கட்சியை தொடங்கினார்.

அரசியல் சமூக பணிகளில் இவர் அதிக ஆர்வம் உடையவர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் இவரது வீட்டிற்கு சென்று இவரை சந்தித்து பேசி உள்ளனர்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் ஒருமுறையும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்ட போதும் மாரியம்மாள் தன்னந்தனியாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.

சமீபத்தில் மதுவிற்கு எதிராக கலிங்கப்பட்டியில் நடந்த போராட்டத்தின் போதும் மாரியம்மாள் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டக்களத்தில் நின்ற பெருமாட்டி – செந்தமிழன் சீமான் புகழாரம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய அண்ணன் வைகோ அவர்களின் தாயார் மாரியம்மாள் அவர்கள் காலமான செய்தி கேட்டு ஆழ்ந்த துயரம் அடைகிறோம்.

அருமைத்தாயார் மாரியம்மாள் அவர்கள் இறுதிவரை போராட்ட உணர்வு நீங்காத பெருமாட்டியாக வாழ்ந்தவர்.

சமூகப் போராட்டக்களங்களுக்கு பெற்றெடுத்த தன் மகனை தன்னைப்போலவே உறுதியான நெஞ்சுரம் கொண்டவராக வளர்த்தெடுத்து போராட்ட களத்திற்கு அனுப்பி வைத்த வீரத்தாயாக அருமைத்தாயார் மாரியம்மாள் விளங்குகிறார்.

தேசியத்தலைவர்.மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் இளைய மகன் பாலச்சந்திரன் சிங்கள பேரினவாதிகளால் கொல்லப்பட்ட புகைப்படங்கள் வெளியான போது, அம்மையார் மாரியம்மாள் அவர்களும் அக்கொடுமையை சகிக்க முடியாமல் அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டார்.

சில மாதங்களுக்கு முன் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தின் உயிர் ஈகம் செய்த காந்தீயவாதி சசிப்பெருமாள் அவர்களின் மறைவிற்குப் பிறகு தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக எழுந்த போராட்டக்களத்தில் தன்னை ஒரு போராளியாக இணைத்துக்கொண்டு தள்ளாத வயதிலும் தளராத தனது போராட்ட உணர்வில் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தை தலைமையேற்று நடத்திய பெருமை அருமைத்தாயார் மாரியம்மாள் அவர்களுக்கு உண்டு.

உறுதியான நெஞ்சுரம் உடைய பெருமாட்டியார் மாரியம்மாள் அவர்களின் இழப்பில் வாடி இருக்கும் அண்ணன் வைகோ மற்றும் அவரது குடும்பத்தார்களின் பெருந்துயரத்தில் பங்கேற்கிறேன்.

மேலும் வற்றா பெருமைகளோடு வாழ்ந்து முடிந்திருக்கும் மதிப்பிற்குரிய அருமைத் தாயார் மாரியம்மாள் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் புகழ்வணக்கத்தை செலுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.

About admin

Check Also

Jaffna arrest 2018

யாழ்ப்பாணத்தில் இரண்டு வாரங்களில் 50 பேர் கைது! – சமூக விரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள்

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் சம்பந்தமாக 50 பேர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

content protection plugin by http://jaspreetchahal.org