ஸ்ரீதேவி உடல் இந்தியா வருவதில் தாமதம் ஏன்?

திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி, மாரடைப்பால் சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு (துபாய் நேரப்படி) உயிரிழந்தார். இவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்காக அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் டிரான்ஸ்போர்ட் மற்றும் டிராவலின் ஜெட் ரக விமானம் நேற்று துபாய் புறப்பட்டு சென்றது.
திட்டமிட்டபடி நேற்று (பிப்.,25) பகல் 1.30 மணிக்கே துபாயில் இருந்து இந்த விமானம் மும்பை புறப்பட்டிருக்க வேண்டும். நேற்று பிற்பகலே ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை முடிவடைந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், இதுவரை விமானம் துபாயில் இருந்து புறப்படவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையை டாக்டர்கள் வழங்காததும், ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது தானா என்பது பற்றிய துபாய் போலீசாரின் விசாரணை இன்னும் முடிவடையாததுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் போலீசாரின் விசாரணை அறிக்கையும் கிடைத்த பிறகே ஸ்ரீதேவியின் உடல் துபாயில் இருந்து கொண்டு வரப்படும். ஸ்ரீதேவிக்கு இதய நோய் ஏதும் இல்லை என அவரது குடும்பத்தினர் கூறி இருப்பதால், திடீர் மாரடைப்பு ஏற்பட்டது எப்படி என போலீசார் விசாரணையை நீட்டித்ததால் அவரது உடலை மும்பை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் இன்று பிற்பகலுக்கு பிறகே ஸ்ரீதேவியின் உடல் துபாயில் இருந்து புறப்படலாம் என கூறப்படுகிறது. முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்கு பிறகு ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு இன்று இரவு அல்லது நாளையே நடைபெற வாய்ப்புள்ளது.

Views:
257
Article Categories:
Cinema · India · News

Comments are closed.